ஐந்தாறு வருடங்கள் இருக்கும், ஒரு இசைக்குழுவின் டிவிடி பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இசைக்குழுவின் மொத்த repertoire பற்றிய ஒரு ரிவ்யூ. அதில் 1972 ல் வெளிவந்த ஒரு பாடலைப் பற்றிச் சொல்லும் போது அனைவரும் ஒரே குரலில் அதற்கு முன்பு அப்படிப் பட்ட ஒரு இசையைக் கேட்டதில்லை என்று சொன்னார்கள். கிட்டத் தட்ட முப்பத்தாறு வருடங்கள் கழித்து நான் முதன் முதலில் கேட்ட பொழுதும் அப்படித் தான் உணர்ந்தேன் ,அந்த இசைக்குழு Pink Floyd, பாடல் Echoes.

இவ்வளவு வருடங்களில் இசையில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்டது. ஏகப்பட்ட மாற்றங்கள் ,சாதனைகள் படைத்தாலும் Echoes தனித்திருக்கிறது .எப்போதும் இருக்கும்.

இதுக்குப் பெயர் தான் Timelessness .சில இலக்கியப் பிரதிகளுக்கு இருப்பது போல காலங்கடந்து கவரும் தன்மை. இதற்கு முன்பு இப்படி ஒரு பாடல் வரவில்லை, இதற்கு பின்பு இதைத் தாண்டி ஒரு பாடல் வரவில்லை. இந்தப் பாடல் அளவுக்கதிகமாகப் பிடிக்க இன்னொரு முக்கிய காரணம் இந்த வீடியோ.

பொதுவாக கான்சர்ட் ஃபில்ம்னாலே ஆடியன்ஸோட பங்கு கண்டிப்பா இருக்கும்.சில கான்சர்ட் ஃபில்ம்களில் ரசிகர்களின் ஆரவாரம் நம்மளை வேறு நிலைக்குக் கொண்டு செல்லும், நாம் அந்த இடத்தில இல்லையே என்று தோன்றவைக்கும்.அந்த லைவ் எனெர்ஜிக்கு ஈடு எதுவும் இல்லை. இப்படித் தான் வுட்ஸ்டாக் என்று ஒரு மாபெரும் இசைத் திருவிழா 400,000 பேர் கலந்து கொண்டு நிறைய ஆர்டிஸ்ட்ஸ் பங்கு பெற்று 1969 ல் விமரிசையாக நடந்தது. ஐரிஷ் கிட்டாரிஸ்ட் ரோரி கேலகரின் Irish Tour ’74 இன்னொரு மைல் கல். கான்சர்ட் நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்னர், பத்து வெடிகுண்டுகள் பெல்ஃபாஸ்ட் நகரின் அநேக இடங்களில் வெடித்தது.எல்லா இசைக்கலைஞர்களும் அவர்களது நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர். மாறாக, கேலகர் குறிப்பிட்ட தேதியில் நடத்தி ஒரு சாதனையை நிகழ்த்தினார். என்னை மிகவும் பாதித்த இசைக் கலைஞன். இவரைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக உணர்ச்சிவசப்பட்ட பொழுது எழுதுகிறேன்.

That being said, ஃபிங்க் ஃப்ளாய்ட் ஆடியன்ஸ் யாருமே இல்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஒரு கான்சர்ட் நடத்தத் திட்டமிடுகின்றனர் .எப்படி வந்தது இந்த எண்ணம் ?

1971ல் Adrian Maben என்பவர் ஃப்ளாய்டின் இசையை இன்னும் கலாப்பூர்வமாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு முறை இத்தாலியின் நேப்ள்ஸ் நகருக்குச் சென்ற போது அருகிலிருக்கும் பாம்பெய் என்ற அழிந்து போன வரலாற்று எச்சத்தில் தோன்றிய ஐடியா.

பாம்பெய் – இத்தாலியில் உள்ள வெஸூவியஸ் என்கிற மலையில் ஏற்பட்ட ராட்சத எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சாம்பலால் மண்ணில் புதைந்த ஒரு ரோம நகரம். இதனுடன் ஹெர்குலேனியம் என்ற ரோம நகரமும் புதைந்தது. இது AD 79ல் நடந்தது. இது ஒரு தற்போது டூரிஸ்ட் ஸ்பாட். இங்கு சென்று வந்த போது தான் Adrian Maben தன்னுடைய பாஸ்போர்ட்டை தவறவிட்டார். தனியாக அதைத் தேடிச் சென்ற பொழுது தான், அந்த இடத்தில் நிலவிய பேரமைதியைப் பார்த்து இதை இசையால் நிரப்பினால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

பாம்பெயில் உள்ள ஒரு புராதன ரோம ஆம் ஃபிதியேட்டர் தான் பிரதான ஸ்டேஜ், க்ளாடியேட்டர்தனமாக உள்ள களத்தை யாருமில்லாத அமைதியில் இசையால் நிரப்பினார்கள். ஃப்ளாய்டின் மிகச் சிறந்த கான்சர்ட் ஃபில்ம் இது. மாஸ்டர் பீஸ்.கிட்டாரை இன்னும் தீவிரமாகக் காதலிக்க வைத்தது டேவிட் கில்மோர் .சைக்கெடெலிக் ராக் இசையின் ஒரு அழகான சிம்ஃபனி .

அடுத்த மாதம் டேவிட் கில்மோர் பாம்பெய்க்கு, க்ளாடியேட்டர் சண்டைக்காக ஏற்படுத்திய அந்த ஆம் ஃபிதியேட்டருக்கு இவ்வளவு வருடங்கள் கழித்து மீண்டும் போக இருக்கிறார். இந்த முறை ஆடியன்ஸ் இருப்பார்கள்.

இந்தப் பாடல் கொடுக்கும் உணர்வு என்றும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

Advertisements