ப்லாக் உலகத்தின் பொற்காலமே முடிவுக்கு வந்துவிட்ட தருவாயில் புதிதாக இன்னொரு ப்லாக் எதற்கு?
சுருக்கமான காரணம் : இது ஒரு Repository.
அன்றாடம் நான் எழுதுவதை எல்லாராலும் படிக்க முடியாது, ஃபேஸ்புக்கில் வரும் லைக்குக்காக நான் எழுதுவது கிடையாது. அடுத்து வரும் News feed வரைக்கும் தான் என் எழுத்தின் காலம் அங்கு. யாராவது ஒருவர் இசை பற்றி இன்டர்நெட்டில் தேடும் போது அவர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும் என்ற நோக்கிலேயே எழுதப் போகிறேன்.
அங்குள்ள கூச்சல் கூப்பாடுகளுக்கு மத்தியில் எழுதுவதை விட தனியாக ஒரு மலைவாசஸ்தலத்தில் சுதந்திரமாக இருப்பது போல இங்கு எழுதப் போகிறேன். ஒத்த சிந்தனை, ரசனை உள்ளவர்கள், புதிய விஷயங்களைத் தேடும் ஆர்வமுள்ளவர்கள் இந்த மலைவாசஸ்தலத்தில் வந்து என்னோடு உரையாடலாம், விவாதிக்கலாம், கட்டிப்புரண்டு சண்டை போடலாம், “உன் சிந்தனையே தப்பு” என்று ஒரு பக்கக் கட்டுரை எழுதலாம், அதற்கு பதிலளிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு நெருக்கமானவராக மாறிவிடுவீர்கள், எனக்கு passive ஆக இருப்பது பிடிக்காது.
என்னுடைய எழுத்து உங்கள் அகச்சிக்கல்களை கட்டவிழ்த்து விட்டு, உள்ளொளியைக் கண்டடைய உதவும் ஒரு உபகரணம்……..
கவலை வேண்டாம், இந்த மாதிரி சிக்கலான மொழியே இருக்காது.
இதுவரை உருப்படியாக எதுவும் எழுதவில்லை. எல்லாமே ஒரு வித புலம்பல் தொனியுள்ள எழுத்துக்கள் தான். “இன்னும் எவ்வளவு குப்பையைத் தாண்ட வேண்டும் உண்மையான கலையைக் கண்டடைய”
இந்த வாக்கியமே எனது பேசு பொருளாக இருந்து வந்திருக்கிறது. இந்த Weary Expression தாண்டி நிறைய விஷயங்கள் எழுதலாமென்று இருக்கிறேன். முழுக்க முழுக்க இசை சார்ந்து இருக்கும். இசை பற்றி இங்குள்ள நூல்கள் எல்லாம், சுத்திவளைத்து உண்மையான இசையின் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு அரதப் பழைய பாடலை எடுத்து அதில் 7th சோர்ட் உபயோகித்து இருக்கிறார், பாடகரின் ஸ்ருதி சேரவில்லை, பாடகரே பரமபதித்து இருப்பார். இப்போது எதற்கு போஸ்ட் மார்ட்டம். இதை எல்லாம் பற்றி தாராளமாக எழுதலாம் தான், அதனால் என்ன பயன்? இரண்டு விஷயங்கள் வாசகர்களுக்கு பயன்தரலாம்.
i) சமகால இசைப் போக்கை கறாராக விமர்சிக்கலாம், விமர்சனத்தோடு நிற்காமல் அது மேம்பட ஒரு தீர்வைப் பரிந்துரைக்கலாம். உதாரணம் நான் அடிக்கடி எழுதும் பாடல்களற்று “நீடில் டிராப்” முறை மூலம் வெற்றிடத்தை நிரப்பலாம். பாடல்கள் நமது திரைப் படங்களின் முக்கியமான அங்கம், நான் மறுக்கவில்லை, தீவிர கலை நோக்கோடு எடுக்கப்படும் ஆல்ட்டனிட்டிவ் சினிமாக்களில் முயற்சி செய்து பார்க்கலாம். த்ராபையான இசை இருப்பதற்கு சின்ன சின்ன Cues மூலம் கதை சொல்லலாம்.
ii) எளிமையான மொழியில் பல்வேறு இசை வடிவங்களை, அதன் கூறுகளைப் பற்றி எழுதலாம். இசையின் சிக்கலான டெக்நிக்கல் இடுக்களின் மீது ஒரு வெளிச்சம் பாய்ச்சலாம். சிக்கலான அம்சங்களைப் பற்றி எல்லோருக்கும் புரியும் படி எழுதலாம். ஆகையால், இந்த இரண்டாவது விஷயத்தைச் செய்ய இருக்கிறேன், சிக்கலான இசைக் கூறுகளை எனக்குத் தெரிந்த எளிமையான மொழியில் சிக்கலில்லாமல் எழுதப் போகிறேன்.
ரசனை என்பது நம்முடைய பிரத்யேக அம்சம். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கலாம், ஆனால் இங்கு எல்லோரும் எதிர்பார்ப்பது என்னுடைய படைப்பை நீ ரசிக்க வேண்டும், விமர்சித்தால், உன்னுடைய வயதை பார்ப்பார்கள், பொடியனாக இருந்தால், அடே, பொடியா நீ ஞான சூன்யம் என்று எக்காளம். கற்பனையில் எழுதவில்லை, அந்தப் பொடியன் என்னுடைய நெருங்கிய நண்பன்.
ஒரு உபநிஷத வாக்கியத்துக்கு விளக்கம் கூறி விட்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த ராமானுஜரிடம் உனக்கு ஐயம் உளதா என்று வினவினார் அவரின் குரு யாதவப்பிரகாசர். அதற்கு வேறு விளக்கம் கொடுத்த ராமானுஜரைக் கொலை செய்யும் அளவுக்குப் போனார் யாதவப்பிரகாசர். அதே போல் இன்று நம்மிடம் கேள்வி கேட்கும் பொடியனும் ஒரு ராமானுஜராகக் கூட இருக்கக் கூடும், ஆனால் இந்த 99 ரூபாய்க்கு புத்தகம் போடும் எழுத்தாளர்கள் முதல் தொண்டு கிழம் வரை அநேக யாதவப்பிரகாசர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் என்ன வகையான அறம் இருந்து விடப் போகிறது?
இங்கு அநேக பேரிடம் இல்லாத ஒன்று openness .ஏதோ ஒரு உந்துதலில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்தவனுடைய கருத்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்.
இசை எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. அதன் மீது தீவிர நம்பிக்கை உள்ளவன் நான். நிறைய இசை கேக்கலாம், பேசலாம்.
Advertisements