சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் என் மாமாவுக்கு சில பீட்ல்ஸ் பாடல்களைக் கேட்கச் செய்தேன், சில பாடல்கள் கேட்ட பிறகு,  எம் எஸ் வி கேட்ட மாதிரி ஒரு திருப்தி இருக்கு என்று சொன்னார். நிறைய விஷயங்களைத் தேடித் போகும் போது எம் எஸ் விக்கும் பீட்ல்ஸ்க்கும் நிறைய ஒற்றுமை இருக்கு என்று புரிந்து கொள்ள முடிகிறது. பீட்ல்ஸ் வருவதற்கு முன்னாடி இருந்த Music Landscape கணக்கில் கொண்டு பார்த்தோமானால் அவர்கள் செய்த சாதனையை சுலபமாக ஒரு பக்கத்தில் சொல்லிவிட முடியாது.  ஒரு புறம் Igor Stravinsky, Philip Glass போன்ற avant-garde கம்போஸர்ஸ் எக்கச்சக்க பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு வகை மினிமலிசம். ஹிட்சாக்கின் சைக்கோ படத்தின் தீம் இதனுடைய தாக்கத்தில் இருக்கும். படத்துக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. இருந்தாலும் avant-garde கம்போஸர்ஸ் செய்து கொண்டிருந்த பரீட்சார்த்த முயற்சிகளெல்லாம் ஒரு வழியில் மிகப் பெரிய விஷயம் என்றாலும், சாதாரண ஆட்களுக்குப் புரியவே இல்லை. பீட்ல்ஸ் வருகைக்கு முன்பு வெஸ்டர்ன் கிளாசிக்கல் ம்யூசிக், பாப்புலர் ம்யூசிக் இரண்டினிடையே ஏகப்பட்ட இடைவெளி.  ஆகையால் பீட்ல்ஸ் வரும் போது அவர்களுக்கு பாப்புலர் இசையே பெரிய தேவையாக இருந்தது.

இன்னொரு புறம் ஐம்பதுகளில் ராக் அன் ரோல் போன்ற பிரபலமாக இருந்த இசை எல்லாம் வசீகரமாக இருந்தாலும் ஒரு எல்லைக்குள்ளேயே இருந்தது, ஒரு சில Chords சேர்ந்து ஒரு Loop மாதிரி இருந்து வந்தது. (Chords என்றால் என்ன? சுரங்களில் ச ரி க மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இவை மூன்றும் ஒன்றாக இசைத்தால் வருவது chords . ஒரு எளிமையான (தோராயமாக) உதாரணத்துக்கு “உ”,”இ”,”ரே” இந்த மூன்று எழுத்தையும் சேர்ந்து பாடும் பொழுது “உயிரே” என்று வரும் பொழுது கொடுக்கும் உணர்வு தான்). ஆகையால் பீட்ல்ஸ் வருகைக்கு முன்பு ஒரு சில chords கொண்ட இசை பாப்புலர் ம்யூசிக்கில் தொடர்ந்து ஒரு சலிப்பைத் தந்தது. இங்கு பீட்ல்ஸ் செய்த விஷயம் தான் மிகப் பெரிய தாக்கத்தை உலகமெங்கும் தந்தது. அவர்கள் எடுத்த முதல் விஷயம் ஹார்மனி. வெஸ்டர்ன் ஹார்மனி மட்டுமல்லாமல் உலகமெங்கும் வியாபித்திருந்த ஹார்மனியைத் தேடித் சென்றார்கள். உதாரணத்துக்கு நம்முடைய ஹார்மனியையும் அவர்களின் இசையில் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சில chords உடன் நிற்காமல் அதனுடைய தொடர்ச்சியைத் தேடினார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய chord Sequence உருவாக்கினார்கள். ஒன்று முடியும் இடம் இன்னொன்றின் தொடக்கமாக இருக்கும். அது ஒரு நிற்காத Mystic தன்மையை உருவாக்கியது.  பீட்டல்ஸ்க்கு சிறிது நேரம் கழித்து வருவோம். மேற்கூறிய எல்லா விஷயங்களையும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இங்கே தொடங்கி வைத்தார்கள்.

இவர்கள் வரும் முன்னர் இருந்த சூழலிலிருந்து அவர்களின் இசை எப்படி தனித்து இருந்தது என்று பார்ப்போம். ஆலய மணி (1962) படத்தில் வரும் “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” (https://www.youtube.com/watch?v=J-N6xTuQb88) எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலின் துவக்கத்தில் வரும் motif  ஒரு J.S. Bach ஃபீல் கொடுக்கும். எனக்குத் தெரிந்து எம் எஸ் வியின் ம்யூசிக்கல் ஐடியா இங்கிருந்தே தெளிவாக ஆரம்பித்து விட்டது. அப்போது திரைப்படங்களில் இசை இருந்த சூழலில் இந்தப் படத்தின் பாடல்கள் குறிப்பிடத்தக்க மாற்றம் .கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைத்த டீயூன்களில் அதைத் தாண்டி என்னவெல்லாம் செய்தார்கள் என்பதே தொடக்கமாகும். எம் எஸ் வியின் இசையைத் தேடி நான் ஏன் போகிறேனென்றால் .பீட்டல்ஸ்க்கு இருந்த மாதிரி ஒரு Freewheeling nature இருக்கிறது .சத்தமில்லாமல் சாதனையைச் செய்து விட்டுப் போய்விட்டார்கள்.

-To be continued.

 

Advertisements