ஃப்யூஷன் மியூசிக் பலரால் செய்து வரப்படுகிறது. என்னைப் பொருத்தவரை இரண்டு வேறு துருவங்களிலுள்ள இசை ஒன்றாகச் சேரும் போது புதிதாக எதுவும் தோன்றக் கூடாது, நமக்கு ஒரே இசை மட்டும் கேட்க வேண்டும். ஏனென்றால், இசைக்கு மொழி கிடையாது, வெவ்வேறு வடிவங்களிலுள்ள நல்ல இசை தானாக ஒன்று சேர்ந்து விடும், அந்த அபூர்வ நிகழ்வை வேடிக்கை பார்ப்பது தான் நம்முடைய வேலை.

நம்முடைய இசை பலரால் மேற்கே கொண்டு செல்லப்பட்டது, குறிப்பாக அமெரிக்காவுக்கு. பண்டிட் ரவி ஷங்கர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். எவ்வளவோ கலைஞர்கள் ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டு தம்முடைய பாடல்களில் அவற்றினுடைய பாதிப்பை வெளிப்படுத்தினர்.

ஒரு உதாரணம்: George Harrison’s work on Norwegian Wood.

சில பேர் முழுக்க நம்முடைய கலைஞர்களோடு ஃப்யூஷன் ஆல்பங்கள் செய்தனர். சில ஆல்பங்கள் எடுபடவில்லை. குறிப்பாக. மேண்டலின் ஸ்ரீனிவாஸ், மைக்கேல் புரூக்குடன் சேர்ந்து செய்த ஆல்பம் ட்ரீம். ஸ்ரீநிவாஸுடைய தெய்வீகமான இசைக்கு ப்ரூக்கின் எக்ஸ்பிரிமெண்டல் சவுண்ட்ஸ் எடுபடவில்லை. ஒரு சில பாடல்கள் மிகப் பிரமாதமாக இருக்கும். ஆனால் ஸ்ரீநிவாஸை வைத்து எவ்வளவோ செய்திருக்கலாம். அப்படிப்பட்ட பொக்கிஷம்.

ஆனால் ராய் கூடர், விஸ்வமோகன் பாட்டோடு சேர்ந்து வெளியிட்ட இந்த ஆல்பம் முக்கியத்துவம் வாய்ந்த ஆல்பம்.ரிக்கார்டிங் ஆரம்பித்ததற்கு ஒரு மணி நேரம் முன்னால் தான் சந்திக்கிறார்கள் என்று தகவல் இருக்கிறது. ரிக்கார்டிங் தியேட்டரிலேயே என்ன செய்ய வேண்டும் தீர்மானித்து, இம்ப்ரொவைஸ் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டு, கிராமி அவார்டு வாங்கிவிடுகிறார்கள். ரிகர்சல் கிடையாது. ராய் கூடர், இதில் ஸ்லைட் கிட்டார் மட்டும் வாசிக்கிறார், பிரதானமாக விஸ்வமோகனுக்கு வழி விடுகிறார். கிட்டாரின் இசையை (ப்ளூஸ்) வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை. ஒரு சிறந்த ஃப்யூஷன் ஆல்பம் எப்படி இருக்கவேண்டுமென்று இதை ஒரு முக்கிய உதாரணமாகக் கருதுகிறேன். மாஸ்டர்பீஸ்.

Advertisements