எழுதுவது ஒரு அவுட்லெட் என்று தான் ஏதாவது பிடித்த விஷயங்களை அடிக்கடி எழுதுகிறேன். தினமும் காலை இரண்டு மணி நேரம் சுலபமாகக் கிடைக்கிறது. ஒரு மணி  நேரத்தை இன்னும் யாருக்காவது, இல்லை எனக்கே உபயோகமாக இருக்கும்படி செய்யலாமா என்று நினைத்த போது தோன்றியது இந்த போஸ்ட். Sharing Good Things Make Me Stronger. என்னுடைய ஃப்ரெண்ட் லிஸ்டில் இருக்கும் யாரும் கிட்டார் வாசிப்பது மாதிரி தெரியாவில்லை, ஆகையால் எனக்குத் தெரிந்த டெக்னிக்கல் இத்யாதிகளை இப்போதைக்கு சொல்ல அவசியம் இருப்பது மாதிரி தெரியவில்லை. ஒரு நாள் ஒரு ஃபேஸ் புக் நண்பர் நேரில் சந்திக்கலாம், எனக்கு தமிழ் சினிமா இசை தவிர்த்து வேறு இசையை அறிமுகப்படுத்துங்கள் என்று சொன்னார். அவரை சந்திக்கப்போகிறேன், அப்போது தான் இதையே என் எழுதக்கூடாது என்று தோன்றியது. சில பேருக்கு உபயோகமாக இருக்கும். ஒரு தடவை வாசு நான் எழுதிய எம்.எஸ்.வி கட்டுரையை அவருடைய அகநாழிகையில் பதிப்பிக்கிறேன் என்றார், அதற்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்போதே இது மாதிரி சில விஷயங்களை அதில் எழுதலாம் என்று நினைத்தேன், முடியாமல் போய்விட்டது, எதில் எழுதினால் என்ன, வாசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலே போதுமானது.

ஒரு நாள் சொக்கன் என்பவரின் ஒரு போஸ்ட் தென்பட்டது, அதில் அவருடைய நண்பருக்கு 40 days Project (ஒரு உதாரணத்திற்கு) பற்றி சொன்னார், ஆதாவது தினமும் ஏதாவது ஒரு காரியத்தை குறிப்பிட்ட அளவு செய்யலாம், நாளடைவில் நம்மக்குத் தெரியாமலே நிறைய கற்றிருப்போம். புத்தகம் வாசிப்பதே சலிப்பாகத் தோன்றினால் சில புத்தகங்களிருந்து சில பக்கங்கள்  மட்டும் தினமும் படிக்கலாம், கிட்டார், கீ போர்ட் வாசிக்க முயற்சிக்கலாம். எவ்வளவோ தகவல்களை இலவசமாக யூ ட்யூப் வழங்குகிறது. தினமும் ஒரு பத்தி எழுதலாம். இன்னும் எவ்வளவோ உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். என்னை படிப்பவர்களுக்கு  தினமும் எனக்குப் பிடித்த ஒரு ஆல்பம், ஒரிஜினல் சவுண்ட் டிராக் அறிமுகப் படுத்தப்போகிறேன். இன்னொரு வசதி மீண்டும் நான் நீண்ட நாளைக்கு அப்புறம் அவைகளை மறுபடியும் கேட்கலாம். எல்லாரும் தொடர்ந்து வாசிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய பிளாகில் அவை இருக்கும். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். என்னுடன் தொடர்ந்தால் ஓரளவுக்கு பரந்துபட்ட, ஓரளவு என்ன, நிறையவே பரந்துபட்ட இசையை அறியமுடியும். எனக்கும் இயந்திரத்தனமாக ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கத்திலிருந்து சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்ட மாதிரி இருக்கும். இயந்திரத்தனமாக இலக்கியம் படிப்பது, இசை கேட்பது, உலக சினிமாக்கள் பார்ப்பது,  …….இதனால் எந்த பிரயோசனமும் இல்லை. கேட்டறிந்த, படித்த  விஷயங்களை கிரகிப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளி வேண்டும். கிரகிப்பதற்கான இடைவெளி தான் இது. எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் யாரிடமாவது உடனே சொல்லவேண்டுமென்ற ஆர்வம் எப்போதும் இருக்கும். அவரையும் அந்த நல்ல விஷயம் தொத்திவிடலாமென்ற நப்பாசை.

அதே மாதிரி, நல்ல படைப்புகள் அதனுடைய வாசகர்களை, ரசிகர்களை  தானாகவே சேர்த்துக்கொள்ளும். இரண்டு நாளைக்கு முன்பு அசோகமித்திரனின் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்பை மீண்டும் படிப்பதற்காக எடுத்து வைத்தேன். அதற்குள் ஏதோ ஒரு காரியத்தை செய்யப் போய்விட்டேன். அதற்குள் என் வீட்டுக்காரி எடுத்து புரட்டிக் கொண்டிருந்தாள். அவள் இலக்கியமெல்லாம் வாசித்ததே கிடையாது, சரி, கொஞ்ச நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடுவாள் என்று நினைத்தேன், ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வாசித்துக்கொண்டிருந்தாள், நேற்று பால்கனியில் பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டு குறுநாவல்கள் தவிர்த்து அனைத்து சிறுகதைகளையும் அந்த தொகுப்பில் முடித்துவிட்டேன் என்றாள். இதையே தான் என் பையன் அருமையாக கிட்டார், கீ போர்ட் வாசிக்க வேண்டும், டான்ஸராக வேண்டுமென ப்ரயத்தனப் படும் பெற்றோர்களுக்கு பரிந்துரைப்பேன், முதலில் அதற்கான சூழலை நம் வீட்டில் ஏற்படுத்திய பிற்பாடு தான் ஒரு மியூசிக் அல்லது டான்ஸ் ஸ்கூலில் சேர்க்கவேண்டும். தேவையில்லாமல் ஃபீஸைக் கட்டி பிரயோசனமில்லை. இசையோ, இலக்கியமோ, சரி எந்தவொரு கலையும் தானாக நம்ம ஈர்த்து விடும். கலாரசனை எல்லோரிடமும் இருக்கிறது. அதற்கான சூழல் தான் முக்கியமானது. சிலருக்கு அந்த சூழல் எளிதில் வாய்க்கிறது , சிலருக்கு தாமதமாக ஏற்படுகிறது. இது தெரிந்ததால் தான் என் ரசனைக்கு வேறுதுருவமாக இருந்த பெண்ணை எளிதில் கல்யாணம் செய்ய முடிந்தது. இந்த இலக்கியம், இசை, ரசனை போன்ற இத்யாதிகள் மட்டும் வாழ்க்கை இல்லை. ஆனால் இவற்றின் வாசனை எப்போதும் நம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கவேண்டும். நல்ல இசை ஒரு சாதாரண ஞாயிறு காலையை அழகாக்கி விடும். என் வீட்டில் டீவி பெயருக்குத் தான் இருக்கிறது. எப்போதாவது தான் பார்ப்போம். அதற்காக டீவி பார்ப்பது கேடு என்ற பிரச்சாரம் செய்யவும் தேவையில்லை. தேவைப்படும் போது பார்க்கலாம். அவரவர் விருப்பம்.

ராக், ப்ளூஸ், ஜாஸ், ஃபோல்க், கண்ட்ரி, பாப், ஹிந்தி, பெங்காலி, இன்ஸ்ட்ருமென்ட்டல், கவ்வாலி, மாலியன், க்யூபன் மியூசிக், டெஸர்ட் ப்ளூஸ் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன, தோதுவாக இருப்பவற்றை எழுதுகிறேன்.

சரி, ஏன் இப்படி தேடித் தேடி உலகத்தில் படைக்கப்பட்ட இசையெல்லாம் கேட்கிறேன். எது சிறந்த இசை? அப்படி ஒன்றும் கிடையாது. ஒவ்வொருத்தருடைய மனச்சாய்வு சார்ந்தது. சிலருக்கு ஜாஸ் அறவே பிடிக்காது, சிலருக்கு இன்ஸ்ட்ருமென்ட்டல் கேட்க பொறுமை இருக்காது. எல்லாமே பயிற்சி தான், நான் ஏன் கேட்க வேண்டும்? பாஷையே தெரியாமல் சப் டைட்டிலோடு உலகத் திரைப்படங்கள் எவ்வளவோ பார்க்கிறோம், ஏன் பார்க்கிறோம்? ஏன் என்றோ எழுதிய இலக்கியத்தை தேடிப் படிக்கிறோம்?

ஆக, அந்த உழைப்பில் பாதி இருந்தாலே போதுமானது. அநேக உலக இசையை கேட்டுவிடலாம்.

முதலில் பாடல் வரிகள் சிறப்பாக அமைந்த ஆல்பங்களை பற்றி எழுதப் போகிறேன்.ஏன் ஆங்கில பாடல் வரிகள் மீது சிலருக்கு ஒவ்வாமை இருக்கிறது, பாடல் புரியவில்லை என்று வேறு சொல்கிறார்கள், எப்படி நாம் ஆங்கில, இரானிய, ஜப்பானிய, கொரிய திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தோம்?லிரிக்ஸ் இணையத்திலேயே இருக்கிறது? அப்புறம் என்ன? நான் ஏன் தேடிப் போய் இவையெல்லாம் கேட்கிறேனென்றால் அது ஒரு அனுபவம். இலக்கியம் படிப்பது மாதிரி. தமிழ் நாட்டில் அதற்குண்டான சூழல் இல்லை. திரையிசை மட்டுமே, அதில் எழுதப் படும் பாடல்களில் நேர்மை அறவே கிடையாது. பிரச்சாரம் மற்றும் சுலபமாக தேமேனென்று இருக்கும் எந்த சலனமும் செய்யாத வரிகள். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.

ஒரு நேர்மையான ஹை வே பேட்ரோல்  போலீஸ்காரனின் தம்பி அயோக்கியன். ஒரு நாள் போலீஸ்காரனுக்கு அருகாமையில் ஒரு குற்றம் நடக்கிறது. அதைத் தேடிப் போகச் சொல்லி இவனுக்கு தகவல் வருகிறது. ஒரு குழந்தை ரத்தச் சகதியில் கிடக்கிறாள். அங்குள்ள பெண் கொலையாளியின் பெயர் சொல்லும் போது தான் இவனுடைய தம்பி  அது என்று இவனுக்குத் தெரியவருகிறது. தம்பியை துரத்திச் செல்கிறான் .கிட்டத் தட்ட அவனை நெருங்கும் போது அடுத்த நாட்டின் எல்லைக்கோடு அருகாமையிலிருப்பதை கவனிக்கிறான். அவனை சுட்டிருக்கலாம், அல்லது வேகமாகப் போய் பிடித்திருக்கலாம். அண்ணன் வேண்டுமென்றே தாமதமாகத் துரத்துகிறான், தம்பியும் அடுத்த நாட்டின் எல்லைக்குள் போய் விடுகிறான். காரை ஓரமாக நிப்பாட்டிவிட்டு தம்பியின் கார் வெளிச்சம் மங்கிப் போவதை இவன் பார்த்துக்கொண்டிருப்பதில் பாடல் முடிகிறது .இது ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் எழுதிய ஒரு பாடல். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சூழலுக்கு பாடல் எழுதச் சொன்னால் அண்ணன் தம்பியைக் கொன்றுவிடுவான், அண்ணனுக்கு மெடல்கள் சூட்டி, விருது அறிவித்து நம்முடைய மனசாட்சிக்கு அந்நியமாக்கி விடுவார்கள். அவனுடைய  மனசாட்சியிடமிருந்தே அந்த போலீஸ்காரன் வெகு தூரம் போய்விட்டிருப்பான். சிறந்த இயக்குனர்கள் தனக்கென்று ஒரு Time and Space உருவாக்கிக் கொள்வார்கள். சிறந்த பாடலாசிரியர்களும் அப்படித் தான். அதை எப்படி தான் சிருஷ்டித்த கதாபாத்திரத்தின் வாயிலாக இயல்பாகக் கொண்டுவருவது தான் கலை. நல்ல பாடல் கேட்டு முடித்தவுடன் ஏற்படும் ஒரு சிறிய சலனமே அதன் வெற்றி. நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தை நினைவு படுத்தலாம் அல்லது அவன் ஏன் அப்படி செய்தான் மாதிரி ஏதாவது ஒரு கேள்வியை முன்வைக்கலாம். ஏதாவது ஒன்று கண்டிப்பாக நிகழும். இது எதுவுமே இல்லாமல் தேமேனென்று சினிமா பாடல்கள் இருக்கும். சினிமா பாடல்கள் தாராளமாக கேட்கலாம், குடும்பத்துடன் குத்தாட்டம் போட்டு அதை ஃபேஸ்புக்கில் தாராளமாக பதிவேற்றலாம்.தப்பேதுமில்லை. எல்லாவற்றுக்கும் சுதந்திரம் இருக்கிறது .இலக்கியம் மாதிரி இவற்றின் மீதும் தேவைப்பட்டால் ஈடுபடலாமென்றே சொல்கிறேன். ஆக, அப்படித் தேவைப்படுவோருக்கு, ஆர்வமிருப்போருக்கு இதை எழுதுகிறேன்.

முழு ஆல்பமுமே ப்ரூஸ் தனி ஆளாக வாசித்து, எழுதி, பாடி ரிக்கார்ட் செய்திருக்கிறார். முழுக்க முழுக்க ரொம்பவே டார்க் டோன் இருக்கும்.  வரிகளை கவனிக்காமல் விட்டால் எளிதில் ஆல்பம் முடிந்து விடும். நெப்ராஸ்க்கா படம் பார்த்தவர்களுக்கு, அந்த படம் அதனுடைய சவுண்ட் டிராக் பிடித்தவர்களுக்கு இந்த ஆல்பம் பிடித்துவிடும். இதனுடைய எக்ஸ்டென்க்ஷன்  தான் நெப்ராஸ்க்கா படத்தின் ஸ்கொர். இந்த ஆல்பத்தின் அநேக பாடல்கள் ஒரு குட்டி கதை.

இனிவரும் ஆல்பங்களில் கூடுமானவரை விக்கி பீடியாவில் இருக்கும் தகவல்கள் தவிர்த்து நான் புரிந்து கொண்டது, என்னுடைய எண்ணத்தை பிரதிபலிக்க முயற்சி செய்கிறேன். அதே மாதிரி, சுலபமாகக் கேட்க யூ ட்யூபில் முழு ஆல்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன் .

பிடித்திருந்தால் சொல்லவும்.

Advertisements